ஆதாரங்களைச் சேகரித்தல்
நிகழ்ந்தது என்ன, யார் ஈடுபட்டார்கள் போன்ற தகவல்களை உங்களால் முடிந்த அளவு சேகரித்திடுங்கள். பெரும்பாலான சூழல்களில் உங்கள் பதின்மவயது பிள்ளை தன்னை யார் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை, அடையாளம் காண முடியாத ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அல்லது அறிமுகமில்லாத திரைப்பெயர் சம்பந்தப்பட்டியிருந்தாலும் கூட அவர்கள் அறிவார்கள் (அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்குத் தெரியும் என்று கருதுங்கள்). பெரும்பாலும் தவறான நடத்தையானது பள்ளியில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்கும். அவ்வாறாக இருந்தால், உங்கள் கவலைகள் குறித்து அங்குள்ள நிர்வாகியைத் தொடர்புகொண்டு, பள்ளிக் கொள்கையின் தேவைகளுக்கு இணங்க ஒரு சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டிருப்பதையும் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்துங்கள். உங்கள் பதின்மவயது பிள்ளை இணைய வழி கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதற்கான சான்றாகச் செயல்படக்கூடிய உரையாடல்கள், மெசேஜ்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற விஷயங்களை ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது திரைப் பதிவுகள் செய்து அவற்றை ஆதாரமாகச் சமர்ப்பித்திடுங்கள். விசாரணைச் செயல்முறையில் உதவுவதற்கு அனைத்துச் சம்பவங்களின் பதிவுகளையும் வைத்திருங்கள். அத்துடன், சம்பவம் எப்போது, எங்கே நிகழ்ந்தது (பள்ளியில், குறிப்பிட்ட செயலிகளில்), யார் ஈடுபட்டார்கள் (துன்புறுத்துபவர்களாக அல்லது சாட்சிகளாக) போன்ற தொடர்புடைய விவரங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.